உங்களுக்கு உள்ள பிரச்சனைதான் உங்கள் தொழில் வாய்ப்பு” – மாணவர்களை உற்சாகப்படுத்திய MAK நிறுவனர்

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவு விழா – MAK நிறுவனர் உரை

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தொழில்முனைவு விழா – MAK நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் ஊக்கமூட்டும் உரை

திருச்செங்கோடு, பிப்ரவரி 25: விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் வளாகம்

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் நடைபெற்ற “பால்மர்ஸ் 7C டிஎன்ஏ ஆஃப் என்டர்பிரெனர்ஷிப்” நூல் வெளியீட்டு விழாவும், புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்து நிகழ்ச்சியும் மாணவர்கள் மத்தியில் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக MAK இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் கலந்து கொண்டு ஆற்றிய உரை, இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“என்டர்பிரெனர்ஷிப் என்பது நீங்களே உங்களுக்காக வேலை செய்வது மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்குவது.”

தன்னுடைய உரையில் அவர், உலகில் இல்லாத தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தொழில்முனைவோராக களமிறங்கியதாகவும், இன்று உலகளவில் தேவையான பல முன்னேற்ற தயாரிப்புகளை தங்கள் நிறுவனம் செய்து வருவதாகவும் கூறினார்.

76 வயதிலும் ஓய்வெடுக்காமல் தொழில்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை திட்டத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தரைத்தள உபகரணங்களில் பெரும்பாலானவை தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பாக இருப்பதாக பெருமையுடன் தெரிவித்தார். “பறப்பது டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்; ஆனால் அதன் பின்னணி அமைப்புகள் எங்களுடையவை. நாங்கள் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்கிறோம்” என்ற அவரது விளக்கம் மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொழில்முனைவுக்கும் “நெசசிட்டி”க்கும் உள்ள உறவை விளக்கிக் கூறிய அவர், “நெசசிட்டி இஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன்” என்ற பழமொழியை எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். சுற்றியுள்ள சூழலில் உள்ள பிரச்சனைகளை கவனித்து, அதற்கு புதுமையான தீர்வுகளை கண்டுபிடிப்பதே உண்மையான தொழில்முனைவு என மாணவர்களை சிந்திக்கத் தூண்டினார்.

அமெரிக்காவில் தனியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட தேவையால் பிரஷர் குக்கர் மற்றும் எலக்ட்ரிக் குக்கர் போன்ற கண்டுபிடிப்புகள் உருவானதை எடுத்துக்காட்டாக விளக்கி, “ஒரு பிரச்சனை இருந்தால் அதற்கான தீர்வும் நம்முள் இருக்கிறது. தினமும் நீங்கள் சந்திக்கும் சிக்கல்களை பட்டியலிட்டு, அதற்கு தீர்வு காண முயலுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

மேலும், பல் ஆரோக்கியம் குறித்த தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு, பாரம்பரிய முறைகளில் இருந்த தீர்வுகளை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். “உங்களுக்கு உள்ள பிரச்சனையை நீங்கள் தீர்த்து, அதையே மற்றவர்களுக்கும் வழங்கினால் அதுவே தொழில்முனைவு” என்று எளிய வார்த்தைகளில் விளக்கினார்.

அவரது ஊக்கமூட்டும் உரை, மாணவர்களில் தொழில்முனைவு பற்றிய புதிய சிந்தனையை விதைத்ததுடன், “நான் ஒரு என்டர்பிரெனராவாக மாறப்போகிறேன்” என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல் நீண்டநேர கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, இளம் தலைமுறைக்கு புதுமை, தன்னம்பிக்கை மற்றும் சுயதொழில் மனப்பாங்கை ஊட்டிய மறக்கமுடியாத தருணமாக அமைந்தது.

© 2026 | MAK India Limited | Official Blog